Thursday, April 21, 2011

நசீம் ஹிக்மத் கவிதைகள்

ஆங்கிலத்தில்: ரிச்சர்டு மெக்கனே


வாதாமரம்
என் தலை ஒரு மென்பஞ்சு மேகம், உள்ளும் புறமும் நான் கடல்
நானொரு வாதாமரம் இஸ்தான்புல்லின் குல்ஹேன் பூங்காவில் உள்ள
ஒரு வயதான, கிளைமுறிவு-அடையாளங்களும் தளும்புகளுமுள்ள
வாதாமரம்
உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது

குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம்
என் இலைகள் மின்னுகின்றன நீரில் மீன் என
என் இலைகள் படபடக்கின்றன பட்டுக் கைக்குட்டையென
அதில் ஒன்றைக் கிள்ளி என் அன்பே உன் கண்ணீரைத் துடைத்துக்கொள்
என் இலைகள் என் கைகள், எனக்கு நூறு ஆயிரம் கைகளுண்டு
இஸ்தான்புல்லே உனை நான் தொடுகிறேன் நூறு ஆயிரம் கைகளால்
என் இலைகள் என் கண்கள் அதில் காண்பவைகளை கண்டு நான் அதிர்கிறேன்
நான் உனைக் காண்கிறேன் இஸ்தான் புல்லே ஒரு நூறு ஆயிரம் கண்களால்
என் இலைகள் துடிக்கின்றன, துடிக்கின்றன நூறு ஆயிரம் இதயங்களோடு

குல்ஹேன் பூங்காவில் உள்ள நானொரு வாதாமரம்
உங்களுக்கோ காவல்துறைக்கோ இது தெரியாது


ஆங்கிலத்தில்: ராண்டி பிளாஸிங் & முட்லு கோனுக்


என் கவிதை குறித்து

என்னிடம் வெள்ளிப் பூணுள்ள குதிரை கிடையாது
மூதாதையர் வழிச் செல்வம் கிடையாது வாழ
பணக்காரனோ நிலச்சுவாந்தாரோ கிடையாது
ஒரு பானைத் தேன் மட்டுமே உண்டு
நெருப்பைப் போல் சிவந்த
ஒரு பானைத் தேன்

என் தேனே என் எல்லாமும்
நான் பாதுகாக்கிறேன்
என் செல்வத்தை, என் பெருநிலத்தை
- என் தேன் பானையை-
ஒவ்வொரு நுண் பூச்சிகளிடமிருந்தும்
சகோதரா, பொறு
எப்போது என் பானையில்
தேனை நான் பெறுவேனோ
அப்போது முதல்
தேனிக்கள் வருகின்றன
திம்புக்து நகரிலிருந்து
நம்பிக்கைவாத மனிதன்
ஒரு குழந்தையாக அவன் ஈக்களின் சிறகுகளை பிய்த்தெரிந்தவன் இல்லை
பூனைகளின் வாலில் டின்களை கட்டிவிட்டதில்லை
அல்லது வண்டுகளை தீப்பெட்டிகளில் அடைத்ததில்லை
அல்லது பூச்சிகளின் மண்புற்றுகளை மிதித்தோடியதில்லை
அவன் வளர்ந்தான்
பிறகு இது அனைத்தும் அவனுக்குச் செய்யப்பட்டது
அவன் இறக்கும் போது நான் அவன் முன் இருந்தேன்
எனக்கொரு கவிதையை வாசி என்றான்
சூரியனைப் பற்றியும் கடலைப் பற்றியும்
அணுசக்தி பற்றியும் செயற்கை கோள்கள் பற்றியும்
மேலும் மானுடத்தின் மகத்துவங்களைப் பற்றியும்உலகின் மிக விநோதமான ஜந்து

நீ ஒரு தேளைப் போன்றவன், என் சகோதரனே
ஒரு தேளைப்போல் கோழைத்தனத்தின்
இருளில் வாழ்பவன்
நீ ஒரு குருவியைப் போன்றவன், என் சகோதரனே
எப்போதும் ஒரு குருவியைப் போல் படபடத்து பறந்து விடுபவன்
நீ ஒரு மெளனத்தைப் போன்றவன், என் சகோதரனே
மெளனத்தைப் போல் மூடுண்டவன் உள்ளுரைந்தவன்
நீ நடுங்கிறாய், என் சகோதரனே
விரைந்து உடையும் ஒரு எரிமலையின் வாயைப்போல்


ஒன்றல்ல
ஐந்தல்ல
துரதிர்ஷ்டவசமாக நீ மில்லியன் கணக்கானவனாய் இருக்கிறாய்
நீ ஒரு ஆட்டைப் போன்றவன், என் சகோதரனே
இடையன் குச்சியை உயர்த்தியதும்
நீ விரைந்து சென்று மந்தையுடன் இணைகிறாய்
மேலும் ஓடுகிறாய், கிட்டதட்ட பெருமிதமாகவே ஓடுகிறாய், அறுப்பு ஆலைக்கு
நீ இந்த உலகின் மிக விநோதமான ஜந்து
மீனை விடவும் விநோதமான ஜந்து
நீருக்காக அது கடலைத் தேடுவது இல்லை
இவ்வுலகின் ஒடுக்குமுறைகள் எல்லாம்
உனக்கு நன்றி அறிவிக்கின்றன
மேலும் நாம் பட்டினி கிடக்கிறோம், சோர்ந்திருக்கிறோம், இரத்தத்தால்
தோய்ந்திருக்கிறோம் எனில்
அது உன்னுடைய தவறே
நான் இதை சொல்வதற்கு சிரமமாக உள்ளது
ஆனாலும், பெரும்பாலான தவறுகள் என் சகோதரனே, உன்னுடையதேநான் உன்னைக் காதலிக்கிறேன்

நான் உன்னைக் காதலிக்கிறேன்
ரொட்டியை உப்பில் தொட்டு உண்பதைப் போல
நள்ளிரவில், கொதிக்கும் காய்ச்சலில் கண் விழித்தல் போல
குழாயில் வாய் பொருந்த நீர் பருகுதல் போல
அஞ்சல்காரர் தந்த கனமான தபால் ஒன்றை
அது என்னவென தெரியாமல் பிரித்தல் போல
படபடப்புடன், மகிழ்ச்சியுடன், சந்தேகத்துடன்
நான் உன்னைக் காதலிக்கிறேன்
கடல் மேல் முதல் முறை விமானத்தில் பறத்தல் போல
இஸ்தான்புல் மேல் இருள் மெல்லக் கவிகையில்
என்னுள் ஏதோ ஊர்வது போல
நான் உன்னைக் காதலிக்கிறேன்
வாழ்வதன் பொருட்டு கடவுளுக்கு நன்றி சொல்லல் போலநான் உன்நினைவிலேயே இருக்கிறேன்

நான் உன்நினைவிலேயே இருக்கிறேன்
மேலும் என் தாயின் வாசனையை உணர்கிறேன்
என் தாய், எல்லோரை விடவும் மிக அழகிய என் தாய்


என்னுள் நிகழும் திருவிழாவின் குடைராட்டினத்தில் நீ இருக்கிறாய்
உன் துணிகளை, முடிக்கற்றைகளைச் சுழல விடுகிறாய்
வெகுசில விநாடிகளே உள்ளன உன் முகம் எனக்கு கிடைப்பதற்கும்
இழப்பதற்கும்

என்ன காரணம்,
நான் ஏன் உன்னை நினைவு கொள்கிறேன்,இதயத்தின் ஒரு காயம் என
என்ன காரணம் நீ வெகு தொலைவில் இருக்கும் போதும் உன் குரலைக்
கேட்கிறேன்
மேலும் ஏன் என்னால் உற்சாகமாக இருக்க இயலவில்லைநான் மண்டியிட்டு உன் கரங்களைப் பார்க்கிறேன்
உன் கரங்களை தொட விரும்புகிறேன்
ஆனால் முடியவில்லை
நீ கண்ணாடிக்கு பின்புறம் இருக்கிறாய்
அன்பே, இந்த நாடகத்தின் மங்கலான வெளிச்சத்தில்
நடித்துக் கொண்டிருக்கும் நான் ஒரு குழம்பிய பார்வையாளன்


வாழ்வு குறித்து

வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல:
நீங்கள் மிகவும் தீவிரமாக வாழ வேண்டும்
உதரணமாக ஒரு அணிலைப் போல.
அதாவது, வாழ்வதற்கு மேல், அதைக் கடந்து வேறொன்றையும் தேடாமல்.
அதாவது, வாழ்வது மட்டுமே உங்கள் அனைத்து கடமையாகவும் இருக்க
வேண்டும்.
வாழ்வதென்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்ல:
நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மேலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தீவிரமாக.
உதரணமாக, உங்கள் கை பின்புறமாக கட்டப்பட்டு,
நீங்கள் சுவற்றில் கட்டப்பட்டிருப்பதைப் போல.
அல்லது ஆய்வுக்கூடத்தில் உங்கள் வெண்ணிற அங்கியுடனும்
பாதுகாப்பு கண்ணாடிகளுடனும் இருப்பதைப் போல.
உங்களால் மக்களுக்காக சாக முடியும்,
நீங்கள் ஒரு போதும் காணதவர்கள் அவர்கள் என்ற போதும்,
உங்களுக்கு தெரியும் வாழ்வது மட்டுமே மிக உண்மையானது, மிக அழகானது
என்ற போதும்
உங்களால் மக்களுக்காக சாக முடியும் என்பதைப் போல.
அதாவது நீங்கள் வாழ்வதென்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள
வேண்டும்
அதாவது உங்கள் எழுபதாவது வயதிலும், உதாரணமாக, நீங்கள் ஒரு ஆலிவ்
மரத்தை நடலாம்
அது உங்கள் குழந்தைகளுக்காக இருந்தாலும் இல்லாவிட்டலும்.
ஆனால் நீங்கள் அஞ்சுகிறீர்கள் மரணத்திற்கு, நீங்கள் அதை
நம்பாவிட்டாலும் கூட.
ஏனெனில் வாழ்வதென்பது அதை விடவும் மேலானது எனவே...

நீயே என் குடிபோதை
நீயே என் குடிபோதை...
நான் குடியை விடப்போவதில்லை, அது என்னால் முடியும் என்றாலும்
எனக்கு வேறு எதுவும் வேண்டாம்
எனக்கு தலைவலிக்கிறது, என் மூட்டுகள் எங்கும் தழும்புகளாக உள்ளன
என்னை சுற்றிலும் சகதியாக உள்ளது
நான் போராடிக்கொண்டிருக்கிறேன் உன் அசிரத்தையான ஒளியை நோக்கி வர

No comments:

Post a Comment