Monday, June 14, 2010

3 கவிதைகள்


இன்றை எதிர்கொள்ளல்

சிறுகல் ஒன்றை எடுத்து
பூமியை வீசுவது போல் வீசினேன்
இன்றிலிருந்து இன்றின்மைக்கு
அது
இன்றில் விழுந்து
இன்றில் உருண்டு
இன்றில் நின்றது

அவ்வளவு உருண்டும்
ஒரு இலையும் உதிர்ந்திருக்கவில்லை இன்றிலிருந்து

கோபத்தில் கத்தினேன்
இன்றைவிட்டு வெளியேறுமாறு
ஓங்கிமிதித்தேன்
நெருஞ்சியாய் குத்தியது இன்றின் சூரியன்
விரல் தொட்டு கடலை இழுத்து வந்து
ஊருக்குள் விட்டேன்
வெற்றுப்பள்ளங்களுக்கே பாய்ந்து கொண்டது மீண்டும்
சிறு துளைகளில் ஒளிந்திருக்கும்
இருளை ஊதி ஊதி
இரவை கொண்டு வந்தேன்
நிமிர்வதற்குள் விடிந்து கொண்டது இன்று

மனம் சோர்ந்து
அதனிடம் மன்றாடத் துவங்கினேன்
கதியற்று
அதன் பெருங்கைகளில் ஒப்புத்தந்தேன் எனை

எல்லாம் முடிந்தது
என் பிணத்தை பொறுக்கிக் கொண்டேன்
கல்லை தூக்கி எறிந்தேன்
விடுதலை பெற்று எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது
ஒரு இரவல் காதல் கதை

இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு
பாதிநாள் வளர்வதும்
பாதிநாள் தேய்வதுமாய்
தன் பைத்தியத்தில்
அலைகளுக்குப்
பேய் பிடிக்கச் செய்யும்

இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு
அக்கூ அக்கூ எனக் கதறி
காகத்தையும் உறவு சொல்லி
ஏமாந்து புலம்பும்

இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
கூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்து கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்

இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு
நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்
மலர்ந்த பூக்களின் நறுமணத்தை
கனவில் எண்ணி
நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்

ஒரு இரவல் காதல் கதை 2

என்
காப்பிக் செடிகளின் வசந்தங்களை
நீ எடுத்துக் கொள்வாய் எனில்
காதலற்ற வாழ்வில்
கருத்திடுவேன்
உள்நாவில் ஒரு கசப்பென

என்
பாலைகளின் மழையை
நீ எடுத்துக்கொள்வாய் எனில்
செல்வமற்ற வாழ்வில்
இளைத்திடுவேன்
நிலமெங்கும் நகரும்
உடலற்ற வேனல்குளமென

என்
காளான்களின் வெயிலை
நீ எடுத்துக்கொள்வாய் எனில்
சுகமற்ற வாழ்வில்
வெளுத்திருப்பேன்
அற்ப காலத்தில் வெளியேறுபவன் என

என்
ஊமத்தைகளின் பனியை
நீ எடுத்துக்கொள்வாய் எனில்
அறிவற்ற வாழ்வில்
நஞ்சியிருப்பேன்
மலங்காடுகளில் தன்னந்தனியனென

7 comments:

 1. மூன்றும் அருமையான கவிதைகள் இளங்கோ..

  எனினும் முதல் கவிதையில் கிடைக்கும் இன்றை தூக்கிச் செல்லும் கவிஞ அனுபவத்தின் ஈர்ப்பு மனதை அண்மைக்குட்படுத்துகிறது.

  ReplyDelete
 2. மூ ன்றுமே கவருகின்றன

  ReplyDelete
 3. இளங்கோ கிருஷ்ணன்,

  கவிதையில் நீங்கள் மாஸ்டர் என மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 4. ஒரு சிறந்த படைப்பாளியாக ஆகத் தேவையான அம்சங்கள் எல்லாமே உங்களுக்கு இருக்கின்ற என்பதை உணரவைக்கிறது, இக்கவிதைகள்(ளும்).

  ReplyDelete
 5. மகன் கமலேஷ் அறிமுகம் செய்தார், இத்தளத்தை.

  நிறைய வாசித்தேன்.

  உறைந்து போயிருக்கிறேன்.

  அப்பா உறைந்தது போல.

  ReplyDelete
 6. நல்லாயிருக்கு. தொடருங்கள்.

  கு.தென்னவன்

  ReplyDelete
 7. இளங்கோ கவிதைகள் நல்லா இருக்கு. மீண்டும் கவிதை உலகிற்குள் வாசிப்பாளனாய் பிரவேகிக்கத்தொடங்கி இருக்கிறேன்.

  நன்றி! :)

  ReplyDelete