Sunday, July 19, 2009

கவிதைகள்


இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை

தினமும் ஒவ்வொரு வேங்கை மரம்

கிளைத்து உதிரும் என் அறையில்

இன்று சீதோஷ்ணம் குளிர்ச்சியாய் இருக்கிறது

காற்றும் நெருங்க அஞ்சும் அம்மிருக மலர்களில்

இன்று அவ்வளவு புன்னகை

நாள்தோறும் முட்டி முட்டி சண்டையிடும்

யானைக்கன்றோடு மலைகாடெங்கும் சுற்றித் திரிகிறது

இன்றின் வேங்கை

எப்போதும் என் அறைக்கு வரத் தயங்கும்

அணில் குஞ்சுகள் அதன் கிளைகளில் விளையாடுகின்றன

நான் தவறவிட்ட இரவு ஒன்று

காகமாய் வந்து அமர்ந்திருக்கிறது அதன் உச்சியில்

கா...கா.. என்று ஒரு பாட்டு

அதன் கடலில் அலைகள் பெளர்ணமிக்கு துள்ளுகின்றன

என் அறை சொற்களின் மேல் நிற்க முடியாமல்

தடுமாறுகிறது இனம் புரியாத போதையில்


பட்சியன் சரிதம்

பீடிகை

நான் நினைத்திருக்கவில்லை

விரும்பிய இடத்திற்கு

எனை அழைத்துச் செல்லும் சிறகுகள்

எனக்கு முளைக்கும் என்று.

எனக்குத் தெரியாது

நான் ஒரு பறவை ஆகிக் கொண்டிருந்தேன் என்று.

இது ஒரு மந்திரக்கிணறு

என்பது தெரியாமலே இதன் நீரைப் பருகினேன்.

சூதுரை காதை

இந்நீரின் ருசியில் மூளை இனிக்கிறது.

நாக்கு உன்மத்தம் கொள்கிறது.

பசி முற்றும் போதெல்லாம் இதைப் பருகுகிறேன்.

என் மிருகன் விழித்துக் கொள்கிறான்

கனவின் முட்டைகளை அடைகாக்கும்

பறவையின் இதயம் அவன்

நான் கேட்டதெல்லாம் தருவான்.

கண்டு கேட்டு உண்டு உற்றறியும் புலன்கள்

அரூபத்தின் போதையில் கண் செருகி விம்ம

அவன் தருவதில் என் இரத்தத்தின் வாசம் வீசும்.

மனமுரை காதை

இந்த சாலைகளை நான் நேசிக்கிறேன்.

கரிய பெரும் பாம்புகள் ஊர்ந்து செல்லும் சாலைகள்.

இதில் மனம் காலில் பதிய நடந்து செல்ல விரும்புகிறேன்.

இந்த மண் இந்த பூமி

இந்தக் களி உருண்டையை முழுதாய்

உண்டுவிட பசிக்கிறேன்

மண்ணை உண்டு மண்ணில் உண்டு

விண்ணில் கிளை பறக்கும் மரங்களைப் போல


அலருரை காதை - முதல் காண்டம்

என் சிறகுகளோ எனை வானில் காவித் திரிகின்றன.

என் சக்கரங்கள் காற்றில் உருளமுடியாமல் திணறுகின்றன.

வண்டியின் பாரம் எனை கீழே இழுக்கிறது.

அலருரை காதை - இரண்டாம் காண்டம்

தரையில் விழுந்து புழுதி பறக்க

சகடமிட்டுப் போகிறதென் வண்டி.

கரும்பழுப்புச் சிறகுகள் நிலமுரசிக் கிழிகின்றன.

அந்தம்

ரணம் பொறுக்காமல்

மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்.

வானத்திலேறி

மேகங்களை பிழிந்து குடிப்பதாய்

ஒரு கனவு

விடாய் தணிந்த பறவை

மேகங்களுக்கு மேல் பறக்கிறது.5 comments:

 1. நீங்கள் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என பிரியப்படுகிறேன்.

  ReplyDelete
 2. ஆகா! வா.மணிகண்டன் முந்திக்கிட்டாரு.அதேதான்.

  வலையுலகத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. எங்களுக்காகவாவது நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 3. அன்பு நண்பா

  இத்தனை நாளும் உன் கவிதைகளை எப்படி விலகியிருந்தேன்

  உன் கவிதைகளைப் படித்தபின் எனக்குநான் அன்னியமாய்த்தெரிகிறேன் நண்பா

  என்னை உன் நண்பன் என்று சொல்லிக்கொள்ள மனசு அச்சப்படுகறது

  நீ உணர்ச்சியும் ரசனையும் உள்ளவன் உன்னால் நன்றாக எழுதமுடியும் முயற்சிசெய் என்ற உனது

  வார்த்தைகள் என்னை பார்த்து நகைக்கின்றன.

  எனக்கான வானொலி வாய்ப்பை எப்படி பயன்படுத்தப்போகிறேன் என்கிற கேள்வி முன்னிலும் வலுப்பெற்று விட்டது.

  நல்ல கவிதை அனுபவம் தந்தாய் வளரட்டும் உன் கவிதைப்பணி

  நன்றி

  ReplyDelete
 4. இளங்கோ..

  உங்களின் அனேக கவிதைகளில் தொன்ம கூறுகளின் தொடர்பு மிக விசேசமானது. அது உங்கள் கவிதைகளுக்கான புதுதளத்தை தரவல்லது.
  இக்கவிதைகளிலும் அவ்விதமே

  வாழ்த்துக்கள்

  விஷ்ணுபுரம் சரவணன்

  ReplyDelete
 5. மிக நல்ல கவிதைப்பதிவு.

  வாசிப்பின்போதே வார்த்தைகளின் அழகும் பொருளின் வீரியமும் மனதை புரட்டியெடுக்கும் அவஸ்தை.

  வாழ்த்துக்கள் இளங்கோ.

  ReplyDelete