Sunday, July 19, 2009

கவிதைகள்


இன்றின் வேங்கை மரத்தில் சீற்றம் அறவே இல்லை

தினமும் ஒவ்வொரு வேங்கை மரம்

கிளைத்து உதிரும் என் அறையில்

இன்று சீதோஷ்ணம் குளிர்ச்சியாய் இருக்கிறது

காற்றும் நெருங்க அஞ்சும் அம்மிருக மலர்களில்

இன்று அவ்வளவு புன்னகை

நாள்தோறும் முட்டி முட்டி சண்டையிடும்

யானைக்கன்றோடு மலைகாடெங்கும் சுற்றித் திரிகிறது

இன்றின் வேங்கை

எப்போதும் என் அறைக்கு வரத் தயங்கும்

அணில் குஞ்சுகள் அதன் கிளைகளில் விளையாடுகின்றன

நான் தவறவிட்ட இரவு ஒன்று

காகமாய் வந்து அமர்ந்திருக்கிறது அதன் உச்சியில்

கா...கா.. என்று ஒரு பாட்டு

அதன் கடலில் அலைகள் பெளர்ணமிக்கு துள்ளுகின்றன

என் அறை சொற்களின் மேல் நிற்க முடியாமல்

தடுமாறுகிறது இனம் புரியாத போதையில்


பட்சியன் சரிதம்

பீடிகை

நான் நினைத்திருக்கவில்லை

விரும்பிய இடத்திற்கு

எனை அழைத்துச் செல்லும் சிறகுகள்

எனக்கு முளைக்கும் என்று.

எனக்குத் தெரியாது

நான் ஒரு பறவை ஆகிக் கொண்டிருந்தேன் என்று.

இது ஒரு மந்திரக்கிணறு

என்பது தெரியாமலே இதன் நீரைப் பருகினேன்.

சூதுரை காதை

இந்நீரின் ருசியில் மூளை இனிக்கிறது.

நாக்கு உன்மத்தம் கொள்கிறது.

பசி முற்றும் போதெல்லாம் இதைப் பருகுகிறேன்.

என் மிருகன் விழித்துக் கொள்கிறான்

கனவின் முட்டைகளை அடைகாக்கும்

பறவையின் இதயம் அவன்

நான் கேட்டதெல்லாம் தருவான்.

கண்டு கேட்டு உண்டு உற்றறியும் புலன்கள்

அரூபத்தின் போதையில் கண் செருகி விம்ம

அவன் தருவதில் என் இரத்தத்தின் வாசம் வீசும்.

மனமுரை காதை

இந்த சாலைகளை நான் நேசிக்கிறேன்.

கரிய பெரும் பாம்புகள் ஊர்ந்து செல்லும் சாலைகள்.

இதில் மனம் காலில் பதிய நடந்து செல்ல விரும்புகிறேன்.

இந்த மண் இந்த பூமி

இந்தக் களி உருண்டையை முழுதாய்

உண்டுவிட பசிக்கிறேன்

மண்ணை உண்டு மண்ணில் உண்டு

விண்ணில் கிளை பறக்கும் மரங்களைப் போல


அலருரை காதை - முதல் காண்டம்

என் சிறகுகளோ எனை வானில் காவித் திரிகின்றன.

என் சக்கரங்கள் காற்றில் உருளமுடியாமல் திணறுகின்றன.

வண்டியின் பாரம் எனை கீழே இழுக்கிறது.

அலருரை காதை - இரண்டாம் காண்டம்

தரையில் விழுந்து புழுதி பறக்க

சகடமிட்டுப் போகிறதென் வண்டி.

கரும்பழுப்புச் சிறகுகள் நிலமுரசிக் கிழிகின்றன.

அந்தம்

ரணம் பொறுக்காமல்

மீண்டும் சடசடக்கிறதென் சிறகுகள்.

வானத்திலேறி

மேகங்களை பிழிந்து குடிப்பதாய்

ஒரு கனவு

விடாய் தணிந்த பறவை

மேகங்களுக்கு மேல் பறக்கிறது.Wednesday, July 15, 2009

கன்னட பக்திக் கவிதைகள்கி.பி.12ம் நூற்றாண்டை சேர்ந்த, கன்னட பக்தி இயக்கத்தின் முக்கிய கவிகள் மூவரின் 5 கவிதைகளை மொழி பெயர்த்து இதில் பதிந்துள்ளேன். கன்னட மூலத்திலிருந்து இதை ஆங்கிலத்தில் பெயர்த்தவர் பிரபல இந்திய-ஆங்கில கவிஞரும், தமிழின் சங்க நூல்களை மேற்குலகம் அறியச் செய்தவருமான ஏ.கே.ராமனுஜம்.

மத்திய கால இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் பல் வேறு காலக்கட்டங்களில் பல பக்தி இயக்கங்கள் தோன்றி அந்தந்த மொழிகளின் இலக்கியத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றன. இந்த பக்தி இயக்கங்களின் பொதுவான போக்கு என கடவுளை விதந்தோதுதல், சரணாகதி, மன்றாடுதல், தங்களது இறைக் கோட்பாடை நிறுவுதல் போன்றவற்றை சொல்லலாம்.

இந்த சுபாவங்களையும் மீறி எல்லாக் காலத்திற்குமான கவிதைகளாக இருக்கும் ஒரு நான்கு கன்னடக் கவிதைகளை மட்டுமே இங்கு நான் மொழி பெயர்த்துள்ளேன். தமிழில் இவ்வாறு பக்தி இலக்கிய மரபுக்குள்ளேயே புறநடையாக இயங்கி, கவிதைகளில் சாதனைகள் செய்தவர்களென ஆண்டாளையும், பாரதியையும் மட்டுமே குறிப்பிட முடியும். பாரதியின் இவ்வகைக் கவிதைகள் (கண்ணன் பாட்டு, கண்ணம்மா பாட்டு) தமிழ், இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பெரும் சாதனைகள் என இப்போது மதிப்பிடப்படுகின்றன. இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதும் திட்டம் உண்டு. பார்க்கலாம்.

மகாதேவியக்கா கவிதைகள்

தாயே! சுடரே இல்லாத
இல்லாத தீயில் எரிந்தேன்

இரத்தம் இல்லாத
காயத்தால் வாடினேன்

தாயே! ஒரு மகிழ்சியுமற்று
உழன்றேன்

மெய்யற்ற உலகங்களில்
அலைந்தேன்

என் அன்பே மல்லிகையின் வெண்மையே!
--
பிச்சை பாத்திரமேந்தி
வீடு வீடாக எனை அலைய வைத்தாய்

இரந்து கேட்டால் அவர்களை மறுக்க வைத்தாய்
அவர்கள் வழங்கினால் மண்ணில் வீழச் செய்தாய்

தவறியதை எடுக்க முயன்றால்
ஒரு நாயால் அதை கவ்வ வைத்தாய்

என் அருமை மல்லிகார்சுனரே!

--

கணவ! நீ வா
இன்னே வா
இன்னென்ன இவ்வே வா.

நங்காய்! மலர் நாறும் மேனியன்
மாலை என் இல் வரவை
நிலைவாயில் பொருந்திக் காண்மீண்.


பசவன்னா

குழந்தையுடன் ஒரு வேசி
தொழிலுக்கு போவாள் எனில்

குழந்தையை ஒரு முறை அணைப்பாள்
வந்தவனோடு அரை மனதாய் படுப்பாள்

குழந்தைக்கோ வந்தவனுக்கோ
திருப்தி இல்லை இருவருக்கும்

இங்கும் இல்லை அங்கும் இல்லை
லெளகீகத்தின் நேசம் விட முடியாதது

என் தலைவா! நதிகள் சங்கமிக்கும் இறைவனே.அல்லம்மா பிரபு

ஓடும் ஆற்றிற்கு
எங்கும் கால் உண்டு.

எரியும் நெருப்புக்கு
எங்கும் வாய் உண்டு.

வீசும் காற்றுக்கு
எங்கும் கை உண்டு.

Saturday, July 11, 2009

நீட்ஷே கவிதைகள்


கனியும் மின்னலும்

அதிமனிதனே மிருகமே, நான் வளர்ந்தேன் மிக உயரமாய்;
இப்போது யாருமே இல்லை - நான் பேசிட.

நான் வளர்ந்தேன் மிக உயரமானவனாய் மிகத் தனியனாய் -
நான் காத்திருக்கிறேன்: எந்த ஒன்றிற்காக மட்டும்?

அருகில், மேகங்கள் அமர்ந்துள்ளன:
நான் காத்திருப்பது முதல் மின்னலுக்கு.


விடுதலையடைந்த ஆன்மா

விடைபெறுங்கள்

காகங்கள் கரைகின்றன
சிறகடித்துப் பறக்கின்றன நகரத்திற்கு:
விரைவில் பனி பெய்யும்-
மகிழ்ச்சியே-வீடுள்ளவனுக்கு.

விரைத்து நில்,
திரும்பி கவனி, துயரமே! எவ்வளவு தூரம்!
ஏன், முட்டாளே,
உலகின் குளிர்காலத்திற்கு நீ திருடப்பட்டாயோ?
உலகம்-ஒரு கதவு
ஆயிரம் பாழ்நிலங்களின் நிசப்தத்திற்கும் குளிருக்கும்!
எவர் இழந்தாலும்
எதை இழந்தாலும், நிற்பதில்லை எங்கும் எப்போதும்.

குளிர்காலத்தின் அலைவுறுதலுக்கு சபிக்கப்பட்டவனாய்
இப்போது நீ வெளிரிப்போ
அந்த பனிப்புகை போல
அது எப்போதும் குளிர்ந்த வானத்தையே தேடுகிறது.பற, பறவையே
பாழ்வெளியின் பாடலான பறவையே! அலறிப்பாடு
உன்பாடலை
ஒளித்துக் கொள், முட்டாளே
கசியும் உன் இருதயத்தை பனியிலும், கடுப்பிலும்!

காகங்கள் கரைகின்றன
சிறகடித்துப் பறக்கின்றன நகரத்திற்கு
விரைவில் பனி பெய்யும்
வீடற்றவனுக்கு துயரம் கவியும்!”வெட்கங்கெட்ட மெளனம்

ஐந்து காதுகள் - எந்த ஓசையும் இல்லை அவைகளில்!
உலகம் ஊமையானது...

நான் கேட்டேன் என் ஆர்வத்தின் காதுகளால்:
ஐந்து முறை நான் என்னுள்ளே வலை எறிந்தேன்
ஐந்து முறையும் மீனற்ற வலையே வந்தது
நான் கேட்டேன் - எந்த பதிலும் இல்லை என் வலையிடம்

நான் அவதானித்தேன் என் அன்பின் காதுகளால்.- HUMAN ALL TOO HUMAN என்ற நூலுக்கான குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்.
தமிழ் மொழி பெயர்ப்பு: இளங்கோ கிருஷ்ணன்